Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

குடும்பத்தில் வன்முறை

குடும்ப வன்முறை என்பது குடும்பத்தினுள் அல்லது வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் நடக்கும் வன்முறை மற்றும் அது சுவிட்சர்லாந்தில் தண்டனைக்குரியது. எடுத்துக்காட்டாக, தரக்குறைவாக பேசுதல், பணத்தை (பறித்து) எடுத்தல், அவமானப்படுத்துதல் மற்றும் கடுமையான உடல் ரீதியான வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஒருவரின் சொந்த குழந்தைகள், பெற்றோர்கள், துணைவருக்கு எதிராக வற்புறுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்பை வெட்டுதல், கட்டாய திருமணம் மற்றும் „சுயகௌரவம்“ காரணங்களுக்காக வன்முறை ஆகியவையும் தடைசெய்யப்பட்டுள்ளன.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதைப் பற்றி அறிந்தவர்கள் (உ+ம். குழந்தைகள், அயலவர்கள் அல்லது நண்பர்கள்) பொலிஸாருக்கு தெரிவிக்கலாம். குடும்பத்தில் வன்முறை ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பொலிஸ்‌ கடமைப்பட்டுள்ளது.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • உதவியை பெறுங்கள். ஆலோசனை நிலையம் ஒன்றுடன் மற்றும் / அல்லது பொலிஸாருடன் பேசுங்கள்.
  • உதாரணமாக, அவசரகாலத்தில் நீங்கள் எங்கு உதவி பெறலாம் என்பதை முன்கூட்டியே விசாரித்து அறியவும் உ+ம் அயலவர்கள்.
  • பொலிஸாருக்கும் (அவசர அழைப்பு எண் 117) மற்றும் உங்கள் நம்பிக்கைக்குரிய நபர்களின் முக்கியமான எண்களை எழுதி, எளிதில் அணுகக்கூடிய இடத்தில் வைக்கவும்.
  • உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் முக்கியமான ஆவணங்களை உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் வைத்துக் கொள்ளுங்கள்.

வெளியாட்களுக்கு

  • ஒருவேளை அவசரம் என்றால்: உங்களையே நீங்கள் ஆபத்துக்குள்ளாக்காதீர்கள். பொலிஸ் அவசர எண் 117 மூலம் உடனடியாக தெரிவிக்கவும்.
  • குடும்ப வன்முறை பற்றி சந்தேகப்பட்டால்: உங்கள் சந்தேகங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட நபரிடம் பேசுங்கள். சம்பந்தப்பட்ட நபருடன் ஆலோசனை நிலையம் ஒன்றுக்கு அல்லது பொலிஸாரிடம் அழைத்துச் செல்ல வாய்ப்பளிக்கவும்.

பொலிஸார் அழைக்கப்பட்டால், அவர்கள் வன்முறையில் ஈடுபடும் நபரை அழைக்க அனுப்பிவிட்டு, பல நாட்களுக்கு அந்த நபர் வதிவிடதிற்குத் திரும்புவதைத் தடைசெய்யலாம்.

பாதுகாப்பான தங்குமிடம்

வாழ்க்கைத் துணைவர்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டால், அவர்கள் ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தில் தங்கி இருக்கலாம். இடம் ரகசியமானது மற்றும் தங்குவதற்கு எந்த செலவும் இல்லை. ஆண்களையும் கூட பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லலாம்.

குடியிருப்பு உரிமை

குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்வதற்கென வந்த நபர்கள் பின்னர் வன்முறையை அனுபவிப்பின், தங்கள் வாழ்க்கைத் துணைவரிடமிருந்து பிரிந்து, தமக்கென சுயாதீனமான குடியிருப்பு அனுமதியைப் பெற முடியும். இதைச் செய்ய, நீங்கள் வன்முறையை அனுபவித்திருப்பதை நிரூபிக்க வேண்டும் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள், போலீஸ் அறிக்கைகள் அல்லது பாதிக்கப்பட்ட ஆலோசனை மையங்களில் இருந்து அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

Help and advice