Zusammen sicher in der Schweiz

சுவிட்சர்லாந்தில் பாதுகாப்புடன் ஒன்றாக வாழ்தல்

நல்வரவு!

சுவிட்சர்லாந்தில் ஒன்றாக வாழ்வதற்கான மிக முக்கியமான விதிகள் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ளன. அரசியலமைப்பு மற்ற அனைத்து சட்டங்களுக்கும் மேலாக உள்ளது. வேறு எந்த சட்டமும் இந்த அரசியலமைப்பை மீற முடியாது.

சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுவிஸ் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன. இவை ஒரு நபரின் நம்பிக்கைகளில் (உ+ம் அரசியல், மதம் அல்லது சமூகம்) தங்கியிருக்காது செல்லுபடியாகின்றன.

கூட்டாட்சி அரசியலமைப்பில் மிக முக்கியமான உரிமைகள் எழுதப்பட்டுள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

  • சட்டத்தின் முன் அனைவரும் சமம். இனவெறி மற்றும் பாரபட்சம் காட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை இருப்பதுடன் தமது வாழ்க்கையை தாமே சுயமாக தீர்மானிக்கின்றனர்.
  • மற்றவர்களை அவமதிக்கவோ, அச்சுறுத்தவோ அல்லது வன்முறையைத் தூண்டவோ செய்யாத வரையில் ஒவ்வொரு மனிதனும் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதி உண்டு.
  • அனைத்து நபர்களும் தங்கள் மதத்தை பின்பற்றவும், தங்கள் நம்பிக்கையை அமைதியாக கடைப்பிடிக்கவும் சுதந்திரமாக உள்ளனர்.

வன்முறை ஏற்பட்டால் என்ன செய்வது?

எந்தவொரு வடிவத்திலான வன்முறையும் சுவிட்சர்லாந்தில் தண்டனைக்குரியது – அது பொது இடத்தில் இருந்தாலும் அல்லது வீட்டில் குடும்பத்தில் இருந்தாலும் சரி. உங்கள் பாதுகாப்பிற்கும் மற்றும் ஆதரவிற்கும் சில பரிந்துரைகள் உள்ளன.

பின்வருபவை செல்லுபடியாகின்றன

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு நேர்ந்ததற்கு அவர்களே காரணமில்லை. யார் குற்றம் செய்தாரோ, அவர் மட்டுமே குற்றவாளி.

உதவி பெறுங்கள். அவசரநிலையில், அவசர அழைப்பு எண் 117 ஐ அழைக்கவும். கடந்த காலத்தில் வன்முறைச் செயல் நடந்திருந்தாலும், நீங்கள் ஆலோசனை நிலையம் ஒன்றுடன் மற்றும் / அல்லது பொலிஸிடம் பேச வேண்டும்.

வன்முறைச் செயலின் போது

வன்முறைச் செயல் ஒன்றின் பொழுது உங்களால் செயல்பட முடிந்தால், பின்வருவனவற்றை செய்ய முயற்சிக்கவும்:

  • அவசரகாலத்தில், பொலிஸாருக்குத் தெரிவிக்கவும் (அவசர அழைப்பு எண் 117) – ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை முயற்சிப்பது நல்லது.
  • அச்சுறுத்தும் நபரிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள் மற்றும் நட்பாக இருங்கள்.
  • மற்றவர்களுக்கு தீவிரமாக உதவ அல்லது உங்கள் கவனத்தை ஈர்க்கும்படி கேளுங்கள், எடுத்துக்காட்டாக, „நீங்கள்: சிவப்பு ஜேக்கெற் அணிந்திருப்பவர், பொலிஸை அழைக்கவும்.“

வன்முறைச் செயலுக்குப் பின்

  • குற்றம் நடந்த இடத்தில் எதையும் மாற்ற வேண்டாம்: எந்த தடயங்களையும் அழிக்க வேண்டாம்.
    • எதையும் ஒழுங்கமைக்கவோ அல்லது சுத்தம் செய்யவோ வேண்டாம்.
    • நீங்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கூட துவைக்கக் கூடாது.
  • உங்கள் குடும்ப மருத்துவரால் அல்லது மருத்துவமனையில் முடிந்தவரை விரைவாக உடல் காயங்களை பற்றி ஆவணப்படுத்துங்கள் (அதிகபட்சம் 72 மணித்தியாலத்திற்குள்). ஆவணப்படுத்துதல் முக்கியமானதொரு சான்றாகும்.
  • உதவியை பெறுங்கள். ஆலோசனை நிலையம் ஒன்றை அல்லது பொலிஸாரை (அவசர அழைப்பு எண் 117 அல்லது உங்கள் தெரிவில் ஒரு பொலிஸ் நிலையத்தை) தொடர்பு கொள்ளவும்.
  • ஆலோசனை நிலையங்களும் பொலிஸும் உங்களுக்கு இலவசமாக உதவும்.
  • பொலிஸாருக்கு தெரிவிக்காமல் ஆலோசனை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
  • தற்காலிக வதிவிட அந்தஸ்துடன் உள்ளவர்க்ளுக்கு கூட ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கான சட்ட உரிமை உள்ளது.
  • உங்களுக்கு மொழிச் சிக்கல்கள் இருந்தால், மொழிபெயர்ப்பாளர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான சட்ட உரிமை உங்களுக்கு உள்ளது.

ஆலோசனை நிலையமொன்றில் உதவியை நாடுதல்

நீங்கள் வன்முறையை அனுபவித்திருந்தால் பல்வேறு ஆலோசனை நிலையங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கலாம் (கடைசிப் பக்கத்தைப் பார்க்கவும்):

  • அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கிறார்கள்,
  • அவர்கள் உங்கள் உரிமைகள் மற்றும் சாத்தியமான குற்றவியல் நடவடிக்கைகளை உங்களுக்கு விளக்குகிறார்கள்,
  • அவர்கள் உங்களுக்கு உளவியல் உதவியை வழங்குகிறார்கள் மற்றும்
  • நீங்கள் விரும்பினால் அவர்கள் உங்களை பொலிஸாரிடம் அழைத்துச் செல்கின்றனர்.

பொலிஸாரிடம் தெரிவிக்காமல் ஆலோசனை நிலையமொன்றை தொடர்பு கொள்ளலாம். ஆலோசனை நிலைஙங்கள் உங்கள் சம்மதத்துடன் மட்டுமே பொலிஸை தொடர்பு கொள்ளலாம்.

பொலிஸாரிடம் உதவியை நாடுதல்

நீங்கள் ஒரு குற்றச்செயல் பற்றி பொலிஸாருக்கு தெரிவிக்க விரும்பினால் (முறைப்பாடு ­செய்தல்), நீங்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள எந்த பொலிஸ் நிலையத்தையும் நேரில் தொடர்பு கொள்ளலாம்.

  • பொலிஸார் சம்பவம் குறித்து உங்களிடம் விசாரித்து நீங்கள் கூறுவதை எழுதுவார்கள். சூழ்நிலையைப் பொறுத்து, இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • ஆலோசனை நிலையம் ஒன்றிலிருந்து ஆலோசனை பெறுவதற்கான உரிமை மற்றும் உங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
  • பாலியல் வன்முறையைப் பற்றியது என்றால், சாத்தியமாக இருப்பின், உங்கள் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரால் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
  • உங்களிடம் சான்றுப் பொருட்கள் இருந்தால், உதாரணமாக புகைப்படங்கள், ஆடைகள் போன்றவை, உங்களுடன் எடுத்துச் சென்று பொலிஸாருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • உங்களுக்கு மொழிச் சிக்கல்கள் இருந்தால், மொழிபெயர்ப்பாளர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.

தீவிரமான சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர் அல்லாமல் வேறொருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தாலும் பொலிஸார் விசாரிக்கின்றனர். அரசு வழக்கறிஞர் அலுவலகம் அல்லது நீதிமன்றம் தண்டனையை முடிவு செய்யும்.

Help and advice